×

நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?

*திருவனந்தபுரம் தடத்திலும் இரவு பஸ்கள் ரத்து

நாகர்கோவில் : நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் தடத்தில் இரவு நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில், பண்டிகை விடுமுறை மற்றும் கோடைக்கால விடுமுறைகளில் கன்னியாகுமரி, திற்பரப்பு, பத்மநாபபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பஸ்களில் வந்து செல்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கன்னியாகுமரிக்கு செல்ல நள்ளிரவிலும் வெளியூர்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முன்பு கன்னியாகுமரிக்கு இரவு 10 மணிக்கு மேல் 12 மணி வரையிலும், 2வது காட்சி சினிமா பார்த்து செல்பவர்களுக்காக இரவு ஒரு மணிக்கும் சிறப்பு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனாவிற்கு பின்னர், இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு பின்னர் கன்னியாகுமரிக்கு போதிய பஸ் வசதி இன்மையால் வடசேரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், இரவு 11.30க்கு மதுரையில் இருந்து வரும் பஸ்சில்தான் பயணிகள் முண்டியடித்து செல்ல வேண்டியது உள்ளது. இதனால், இரவில் வடசேரி பஸ் நிலையத்தில் கொசுக்கடியிலும், நூற்றுக்கணக்கான பயணிகள் காத்து நிற்கின்றனர். பஸ் வந்ததும் அவர்கள் முண்டியடித்து ஏறுகின்றனர். பஸ்சில் நிற்க கூட இடம் கிடைக்காத பயணிகள் மீண்டும் காத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே சுற்றுலா சீசன் காலங்களில் நள்ளிரவில் கூட்டத்தை கணக்கிட்டு, சிறப்பு பஸ்களை கன்னியாகுமரிக்கு இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோல் திருவனந்தபுரம் தடத்தில் முன்பு அடிக்கடி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரு மாதங்களாக இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் இன்றி பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதனால், திருவனந்தபுரம் வழியோர ஊர்களின் மக்களும் பணிகள் முடிந்து, இரவு வீடு திரும்ப நீண்ட நேரம் ஆகிறது. இதற்கிடையே தற்போது, மதுரை, நெல்லை மற்றும், தடம் எண் 1, 2, 4 மற்றும் 5 தடங்களிலும் பல பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன.

நெல்லை செல்லும் ஒன் டூ ஒன் பஸ்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 4 வது வழித்தடத்தில் நகர பேருந்துகள் திடீர் திடீரென டிரிப்புகளை ரத்து செய்வதால், அந்த கிராமங்களை சேர்ந்த வேலைக்கு செலலும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர் பிரதான சாலைக்கு சில கி.மீ தொலைவிற்கு நடந்து வந்து பஸ் ஏற வேண்டியது உள்ளது. இதனால், உரிய நேரத்தில் பணிக்கும், பள்ளி மற்றும் கல்லூரிக்கும் செல்ல முடியாமல் பெண்கள் மற்றும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, கிராம பகுதிகளுக்கு தடையின்றி பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரணங்கள் என்ன?

இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, திருவனந்தபுரத்திற்கு முன்பு 39 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது இதன் எண்ணிக்கை 42 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குளச்சல், தேங்காய்பட்டினம், திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, குலசேகரம், பேச்சிப்பாறை என 8 இதர ஊர்களிலிருந்தும் திருவனந்தபுரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. பகலில் திருவனந்தபுரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இரவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

சில டிரைவர்கள், பகலில் தங்கள் சொந்த பணிகளை மேற்கொள்ள வசதியாக, தங்களின் டிரிப்புகளை விரைந்து முடிப்பதற்காக பகலில் செல்லும் டிரிப்பை இரவில் இயக்கும் வகையில், செயல்பட்டனர். இதனால், ₹24 ஆயிரம் கலெக்சன் ஆக வேண்டிய பஸ்களில் கூட்டம் இன்றி ₹12 ஆயிரத்திற்கும் கீழ் வருகிறது. தற்போது இதனை முறைப்படுத்தயுள்ளோம். இரவு 12 மணிக்கு மேல் 45 நிமிடங்களுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்கிறது.

மேலும் கேரள, தமிழக போக்குவரத்து கழக ஒப்பந்தப்படி, ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால், கேரள அரசு வருவாய் இழப்பை தவிர்க்க 50 பஸ்களுக்கு பதில், 30 முதல் 35 பஸ்களை மட்டுமே இயக்குகிறது. கேரள அரசும் ஒப்பந்தப்படி பஸ்களை இயக்கினால், ஆட்கள் ஏறாவிட்டாலும், 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும் நிலை வரும்.
நெல்லைக்கு 8 ஏசி பஸ்கள் உள்பட 20 ஒன் டூ ஒன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீண்ட தொலைவு பஸ்களை இயக்க சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் தாமதமாக வரும் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு, ஒழுங்கு நடவடிக்கையாக அன்று பஸ்களை இயக்க அனுமதிப்பது இல்லை என்றனர்.

மக்கள் சேவைதான் முக்கியம்..

ஹெச்எம்எஸ் மாநில பொது செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை கூறியதாவது, நாகர்கோவிலிருந்து 1, 2, 4 வது வழித்தடங்களில் நகர பேருந்துகளும், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை ஒன் டூ ஒன் மற்றும் மதுரை பேருந்துகளையும் மக்கள் பாதிக்கும் வகையில் குறைத்துள்ளனர். சில பஸ்கள் சில டிரிப்புகளை ரத்து செய்து வருகிறது. தினசரி 50 முதல் 100 பஸ்கள் வரை இவ்வாறு குறைக்கப்படுவதால், கிராமப்புற பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4வது வழித்தடம் பிரதான சாலை என்றாலும், இச்சாலையில் லூப் சாலைகள் அதிகம். தாழக்குடி, பூதப்பாண்டி, சீதப்பால், அருமநல்லூர், பெருந்தலைக்காடு, தெள்ளாந்தி, கடுக்கரை, கீரிப்பாறை, அருமனை என அனைத்தும் லூப் சாலைகளே. இதில் காலை மற்றும் மாலை பீக் அவர்சில் ஒரு பஸ் ஒரு ஊரின் பயணிகளுக்கே பத்தாது. எனவே இந்த தடங்களில் எக்காரணம் கொண்டும் பஸ்களை குறைக்க கூடாது.

பணியாளர்கள் பற்றாக்குறை, கலெக்சன் இல்லை என காரணம் கூறுவதை ஏற்க முடியாது. மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு பஸ்களை இயக்குகிறது. ஆனால், சில அதிகாரிகள் திறமையின்மையால், இதுவரை இல்லாத அளவிற்கு நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழகம் பயணிகளை பாடாய் படுத்தி வருகிறது. இவ்வாறு பஸ்கள் இயக்கப்படாத பட்சத்தில், மக்கள் மாற்று வழி தேடுவார்கள். இதனை தனியார் மேக்சி கேப் வாகனங்கள் மீண்டும் பயன்படுத்தி கொள்ளும். எனவே அதிகாரிகள் அனைத்து தடங்களிலும், அனைத்து பஸ்களையும் சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kanyakumari ,Thiruvananthapuram ,Kanyakumari, ,Vadassery ,
× RELATED கன்னியாகுமரி அருகே தீ விபத்து;...